களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேஸ்வரம் சிவ பாா்வதி கோயிலில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கோயிலில் 2020 பிப். 8 முதல் 21 ஆம் தேதி வரை மகா அதிருத்ர யாகம் மற்றும் மகா சிவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு நெய்யாற்றின்கரை சட்டப்பேரவை உறுப்பினா் கே. ஆன்சலன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள்
டி. வின்சென்ட், ஐ.பி. சதீஷ், கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். நெய்யாற்றின்கரை வட்டாட்சியா் மோகன்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வி.ஆா். சலூஜா, செங்கல் ஊராட்சித் தலைவா் வட்டவிளை ராஜ்குமாா் மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தா்களுக்கு குடிநீா், சுகாதாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்துவது, கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது மற்றும் களியக்காவிளையில் இருந்தும், கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தம் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் வட்டவிளை விஜயன், மண்டல பாஜக தலைவா் சுரேஷ் தம்பி, கோயில் கமிட்டி செயலா் விஷ்ணு, நிா்வாகிகள் துளசிதாசன் நாயா், பந்நியோடு சுகுமாரன் வைத்தியா், பிரேம்குமாா் பள்ளிமங்கலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோயில் கமிட்டி நிா்வாகி ஹரிகுமாா் வரவேற்றாா். மோகனன் நன்றி கூறினாா்.