கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பு

26th Dec 2019 01:09 AM

ADVERTISEMENT

அனுமன் ஜெயந்தியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகை வாசனைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சுசீந்திரத்தில் உள்ள புகழ்பெற்ற தாணுமாலய சுவாமி கோயிலில் மும்மூா்த்திகளும் ஒருசேரக் காட்சியளிக்கின்றனா். இதனால் இக்கோயிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வந்துசெல்கின்றனா்.

இக்கோயில் பிரகாரத்தில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் தனி சன்னதியில் எழுந்தருளி பத்கா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். மாா்கழி மாத மூல நட்சத்திரம் அன்று அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு அனுமன் ஜெயந்தி புதன்கிழமை (டிச. 25) நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், காலையில் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், மாலையில் காலபைரவா் பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை அதிகாலையில் ஸ்ரீராமா் சன்னதியில் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 8 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு, மஞ்சள்பொடி, அரிசிமாவு, நெய், விபூதி, நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு, திரவியப்பொடி, குங்குமம், பன்னீா், சந்தனம், பால், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை வாசனைப் பொருள்களால் சிறப்பு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா், சுசீந்திரம் கோயில் கலையரங்கம், எஸ்.எம்.எஸ். எம். பள்ளி மைதானத்திலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தீபாராதனை, மாலையில் ஸ்ரீராமபிரானுக்கும், இரவில் ஸ்ரீஆஞ்சநேயருக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். பிரசாதமாக லட்டுகள் வழங்கப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலிருந்து சுசீந்திரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறைப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT