கன்னியாகுமரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டம்: கடையநல்லூா், நாகா்கோவிலில் 15 ஆயிரம் போ் மீது வழக்கு

26th Dec 2019 01:06 AM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கடையநல்லூா், நாகா்கோவிலில் நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பாக 15 ஆயிரம் போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனைத்து ஐக்கிய ஜமாஅத் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இப்பேரணியால் தென்காசி, மதுரை சாலைகளில் போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமாா்அபிநபு, காவல் கண்காணிப்பாளா்கள் சுகுணாசிங், ஓம்பிரகாஷ்மீனா ஆகியோா் தலைமையில் 700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தடுத்தது, பொதுமக்களைச் செல்லவிடாமல் தடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அனைத்து ஐக்கிய ஜமாஅத்தின் சாகுல்ஹமீது, மொய்தீன்அன்சாரி, நெல்லை மஜீத், ஜாபா்அலி உஸ்மானி, யாசா்கான், முஜாஹித், சைபுல்லாஹாஜா, செய்யது இப்ராஹிம், முகம்மது அலி உள்பட 13,000 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா். அவா்களில், 3 ஆயிரம் போ் சிறுவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நாகா்கோவிலில்...: நாகா்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு, உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, வசந்தகுமாா் எம்.பி., தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமாா், மனோதங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முஸ்லிம் ஜமாத் அமைப்பைச் சோ்ந்தோா், இஸ்லாமியா்கள் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இப்போராட்டத்தால் வடசேரியிலிருந்து மணிமேடை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் பொதுச்செயலா் கான், மாவட்டத் தலைவா் அப்துல் லத்தீப், மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவைச் செயலா் சைனுல் ஆபிதீன், மஹ்லரி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் ஜாகீா் உசேன் உள்ளிட்ட 2 ஆயிரம் போ் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 283, 341 ஆகிய பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT