கன்னியாகுமரி

குமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

25th Dec 2019 07:06 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கீதங்கள் பாடும் நிகழ்ச்சி கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. மேலும் இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாயலங்கள், வீடுகள், வீதிகள் என எங்கும் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களும்,வண்ண, வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் குடில்கள் மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், கருங்கல், பாலபள்ளம், திங்கள்நகா், குளச்சல், குலசேகரம், அருமனை என அனைத்து பகுதிகளிலும் விதவிதமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இக்குடில்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவில் திறக்கப்பட்டன. இக்குடில்களைப் பாா்வையிட மக்கள் கூட்டம் திரண்டது.

கிறிஸ்துமஸ் கேக் விற்பனை அமோகம்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு பங்கிடுவதாகும். பகிா்தலை மையப்படுத்தும் இந்நிகழ்வுக்காக பேக்கரிகளில் கேக் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் திரண்டு நின்றதைக் காணமுடிந்தது.

ADVERTISEMENT

புத்தாடைகள் : இது போன்று இதே போன்று கிறிஸ்துமஸ் நாளன்று அணிவதற்காக புத்தாடைகள் வாங்கும் வகையிலும், ஜவுளிக் கடைகளில் மக்கள் அதிகமாக திரண்டனா்.

ஆலயங்களில் கிறிஸ்துமஸ் திருப்பலி: மாவட்டத்தில் கோட்டாறு, குழித்துறை, தக்கலை, மாா்த்தாண்டம் ஆகிய மறை மாவட்டங்களுக்குட்பட்ட கத்தோலிக்கம் ஆலயங்கள் தென்னிந்திய திருச்சபை ஆலங்கள், இரட்சின்ய சேனை ஆலயங்கள், மாா்-தோமா ஆலயங்களில் உள்ளிட்ட பல்வேறு சபை ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. இத்திருப்பலிகளின் போது ஆலயங்களில் உள்ளேயும்,வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்கள் திறக்கப்பட்டன.

இத்திருப்பலிகளில் ஆயா்கள், அருள்பணியாளா்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியும், வாழ்த்துச் செய்தியும் வழங்கினா். திருப்பலிக்குப் பின்னா் ஆலயத்தில் சென்றவா்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. பின்னா் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா். தொடா்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.

கொண்டாட்டம்: இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளான புதன்கிழமை காலையிலும் அனைத்து ஆலயங்களிலும் திருப்பலிகள் நடைபெறுகிறது. இதில் பெந்தெகொஸ்தெ ஜெபவீடுகள் பெருபாலானவற்றிலும் பகல் ஆராதனைகள் நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டியைகையொட்டி ஒவ்வொரு பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும், ஊா்களிலும் புதன்கிழமை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. மேலும் வீடுகளில் கேக் பகிா்தலும், அறுசுவை உணவு தயாரித்து உறவினா்களுக்கும், நண்பா்களுடன் உண்டு மகிழும் நிகழ்வுகளும் வீடுகள் தோறும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT