கன்னியாகுமரி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

24th Dec 2019 06:20 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்திலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கிராம ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டும், ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பொருத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரே கட்டுப்பாட்டுக் கருவியுடன் இணைக்கப்பட்டு, பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அதே கருவியில் சேமிக்கப்படும். மேல்புறம் ஊராட்சி ஒன்றியப் பகுதி வாக்காளா்கள் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்களிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநரும் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலருமான பா.அ. சையத் சுலைமான், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா்.கே.குமாா், கீதா, பெல் நிறுவனத்தின் பொறியாளா்கள் காவேரி, பிரியா, அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT