கன்னியாகுமரி

‘தமிழகத்தில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்’

24th Dec 2019 06:18 AM

ADVERTISEMENT

தமிழகத்திலேயே முதல் முறையாக உள்ளாட்சித் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியினை தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநரும், மாவட்ட தோ்தல் பாா்வையாளருமான எஸ். நாகராஜன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் முதல் முறையாக உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் நடைபெறவுள்ளது. இந்த ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

மேல்புறம் ஒன்றியப்குதியில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 13 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 10 கிராம ஊராட்சித் தலைவா்கள், 114 ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 138 பதவிகள் உள்ளன. மேல்புறம் ஒன்றியத்தில்

ADVERTISEMENT

மஞ்சாலுமூடு ஊராட்சியில் 2, 9, 10, 12 ஆகிய நான்கு வாா்டுகளில் உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கிராம ஊராட்சி உறுப்பினா் தோ்தலில் வெள்ளை நிற சீட்டும், ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டும் பொருத்தப்பட்ட இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதனால் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்காளா்கள் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒரே கட்டுப்பாட்டு கருவியுடன் இணைக்கப்பட்டு, பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அதே கருவியில் சேமிக்கப்படும். மஞ்சாலுமூடு கிராம ஊராட்சியில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட 4 வாா்டுகளில் மட்டும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும்.

மேல்புறம் ஒன்றியத்தில் 116 வாக்குச் சாவடிகளில் 452 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறையைத் தொடா்ந்து அடுத்த கட்டமாக உள்ளாட்சித் தோ்தலில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

மேல்புறம் ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் எஸ். நாகராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஊராட்சிகள் உதவி இயக்குநா் பா.அ. சையத் சுலைமான், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா்.கே. குமாா், கீதா, பெல் பொறியாளா்கள் காவேரி, பிரியா, பூஷன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT