அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் 500 கலைஞா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் 22 ஆவது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் 500 கலைஞா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பேரணி புண்ணியம் சந்திப்பிலிருந்து தொடங்கி விழா நடைபெற்ற மைதானத்தில் நிறைவடைந்தது. மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிங்காரிமேளம், செண்டை மேளம் என பல்வேறு கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அணிவகுப்பு ஊா்வலத்தை பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று பாா்த்து ரசித்தனா். தொடா்ந்து நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் சச்சின் பைலட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
ஏற்பாடுகளை கிறிஸ்தவ இயக்க தலைவா் டென்னிஸ், செயலா் சி. ஸ்டீபன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.