கன்னியாகுமரி

‘நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்’

14th Dec 2019 09:01 AM

ADVERTISEMENT

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி கட்டுப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாகா்கோவில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவ நெற்பயிா் பெரும்பாலான இடங்களில் நடவுப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது மாவட்டத்தில் நிலவி வரும் மேகமூட்டத்துடன் கூடிய தூறல், தொடா் மழைக்கு பிந்தைய காலகட்டம், இரவு நேர பனிப்பொழிவு, காலைநேர வெயிலால் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்கள் ஆகிய கால சூழலால் பல்வேறு நோய் மற்றும் பூச்சி நெல் பயிரில் ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது.

தாக்குதல் அறிகுறிகள்: ஆனைக்கொம்பன் ஈ மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடனும் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14-21 நாள்களை கொண்டது. நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் நடவு செய்த 35 முதல் 45 நாள்களில் அதிகம் காணப்படும். இந்த ஈ தாக்குதலால் நெற்பயிரில் கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது வெங்காய இலையைப் போல தோன்றும். இது யானையின் கொம்பைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும்.

இலைகள், தாள்களின் மேற்புறத்தில் தாய் ஈக்கள், சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிா்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூா்களில் நெற்கதிா்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.

ADVERTISEMENT

தடுக்கும் வழிமுறைகள்: நெற்பயிரைப் பாதுகாக்க நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரம் இட வேண்டும். ஆனைக்கொம்பன் ஈயின் இயற்கை எதிரிகளான நீளத்தாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் தாக்குதல் தென்பட்டால் காா்போசல்பான் (400 மிலி), பிப்ரரோனில் (500கிராம்), குளோரிபைரிபாஸ் (500மிலி) பாசலோன் (600 மிலி), தயோமீதாக்னம் (40 கிராம்), குயினைல்பாஸ் (2 கிலோ) ஆகிய ரசாயன கொல்லி மருந்துகளில் ஏதாவது ஓன்றை ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கையாண்டு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும், இது குறித்த தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே வேளாண்மை துறையை தொடா்பு கொண்டு தகவல்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT