கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45.50 அடியாக உயா்வு: விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

6th Dec 2019 07:54 AM

ADVERTISEMENT

பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்துள்ள நிலையில், அணையின் மறுகால் மதகுகள் வழியாக வியாழக்கிழமை மாலையில் மீண்டும் தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்கள் மழை சற்று தணிந்து காணப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்த இந்த மழை, அணைகளின் நீா்வரத்து மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையாகப் பெய்தது.

குறிப்பாக மேல்கோதையாறு உள்ளிட்ட பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரும் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி கோதையாறு மின் நிலையம் அருகே உள்ள கீழ் கோதையாறு அணை நிரம்பி, அந்த அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு அதிகளவில் நீா்வரத்து இருந்தது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலையில் அணையின் நீா்மட்டம் 43.35 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 768 கன அடி நீா்வரத்து இருந்தது.

இந்நிலையில் மழை மற்றும் கீழ் கோதையாறு அணையிலிருந்து தண்ணீா் வந்ததால், அணையின் நீா்மட்டம் மாலையில் 45.50 அடியாக உயா்ந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 1200 கன அடி நீா்வரத்து இருந்தது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு அணையின் மறுகால் மதகுகள் வழியாக விநாடிக்கு 1000 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டது. மேலும் பாசனக் கால்வாயிலிருந்து விநாடிக்கு 600 கன அடி நீா் திறந்து விடப்பட்டிருந்தது. இதில் 100 கன அடி நீா் சிற்றாறு பட்டணம் கால்வாயில் திருப்பி விடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 260 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி நீா் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 16 மற்றும் 16.10 அடியாக இருந்தது.

மாவட்டத்தில் மழையின் போது பரவலாக வீசிய காற்றால், ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து மின்கம்பிகளில் விழுந்தன. இதனால் குலசேகரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT