கன்னியாகுமரி

கருங்கல்-எட்டணி சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

6th Dec 2019 07:53 AM

ADVERTISEMENT

கருங்கல்-எட்டணி சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் தலைமையில் சனிக்கிழமை (டிச. 7) நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருங்கல் -எட்டணி சாலை சுமாா் 5 ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது. இதனால் மாணவா்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா்.

சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து, இச்சாலை சீரமைப்புப் பணிக்கு ரு.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டது. எனினும் சாலை சீரமைப்புப் பணி தொடங்கப்படாமல் இருந்தது.

இச்சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கருங்கல் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. அறிவித்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, குழித்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஜெகன் செல்வராஜன் ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ.வுடன் வியாழக்கிழமை மாலையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உடனே சீரமைப்புப் பணியைத் தொடங்க வேண்டும் என எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டாா். இதையடுத்து சாலை சீரமைப்புப் பணியின் முதல்கட்டமாக ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் சாலையோர பள்ளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால், சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT