குலசேகரம் செருப்பாலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
குலசேகரம் பேரூராட்சி 14ஆவது வார்டு பகுதியான செருப்பாலூர் முள்ளம்பாறை விளையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் புதிதாக கடை கட்டப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க திட்டமிட்டுள்ள இடத்தின் அருகே சாலைப் பகுதியில், அரசுத் தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. மேலும் செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகம் உள்ள நிலையில் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொது அமைதிக்கு பாதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க காங்கிரஸ் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் தலைமையில், திருவட்டாறு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் விமல் ஷெர்லின் சிங் உள்ளிட்டோர் டாஸ்மாக் கடை அமையவிருக்கும் இடத்தை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குலசேகரம் நகர் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.