நாகர்கோவிலில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில் அருகேயுள்ள வண்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன். இவரது நண்பர் தென்தாமரைகுளம் அஜித்துடன், கடந்த மாதம் சி.டி.புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஒரு கும்பல் 2 பேரையும் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தேடிவந்த சுந்தர் (21) சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் சுந்தரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சுந்தரை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, சுந்தர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.