அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்; மருத்துவர் பணியிடங்களை குறைக்கக் கூடாது; நோயாளிகளுக்கு ஏற்ப கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. குமரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பத்மனாபபுரம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 400 க்கு மேற்பட்ட மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் அவர்கள் அவதியுற்றனர்.