கன்னியாகுமரி

குமரியில் ரத்தான கேரள பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கம்

28th Aug 2019 07:29 AM

ADVERTISEMENT

கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு 4 தடங்களில்  பேருந்துகள் மீண்டும் புதன்கிழமை (ஆக.28) முதல் இயக்கப்படுகின்றன.
கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து குமரி மாவட்டம் குளச்சல், பேச்சிப்பாறை, தேங்காய்ப்பட்டினம், அருமனை ஆகிய ஊர்களுக்கு அந்த மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  இதனால், மேற்கூறிய ஊர்களைச் சேர்ந்த  மக்கள் அதிக  பயனடைந்து வந்தனர்.
குறிப்பாக, திருவனந்தபுரம் ரயில் நிலையம், விமான நிலையம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட  இடங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் பயனடைந்து வந்தனர்.  மேலும்,  இப்பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு  வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்தது.
இதனிடையே,  இந்தத் தடங்களில் இயக்கப்பட்ட வந்த  கேரள அரசுப் பேருந்துகளை அந்த மாநில அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டது. இதனால், பாதிக்கப்பட்ட இரு மாநில மக்களும், நிறுத்தப்பட்ட கேரளப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், அரசியல் கட்சிகளும்,  கேரளத்தின் நெய்யாற்றின்கரை, பாறசாலை சட்டப் பேரைவத் தொகுதி உறுப்பினர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
மீண்டும் இயக்கம்: இந்நிலையில் புதன்கிழமை முதல் திருவனந்தபுரத்திலிருந்து குளச்சல், பேச்சிப்பாறை, தேங்காய்ப்பட்டினம், அருமனை ஆகிய தடங்களுக்கு மீண்டும் கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குளச்சல், பேச்சிப்பாறை பேருந்துகள் பாறசாலை பணிமனையிலிருந்து இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் இயக்கத்தை புதன்கிழமை காலை 6 மணிக்கு அந்த மாநிலத்தின் பாறசாலை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்  சி.கே. ஹரீந்திரன் தொடங்கிவைக்கிறார். இதே  போன்று தேங்காய்ப்பட்டினம், அருமனை பேருந்துகள் நெய்யாற்றின்கரை பணிமனையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனை நெய்யாற்றின் கரை சட்டப் பேரவைத் தொகுதி  உறுப்பினர் ஆன்சலன் தொடங்கி வைக்கிறார்.  மக்கள் வரவேற்பு: இந்தத் தடங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுவது குறித்த தகவலையறிந்த குமரி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பேருந்துகள் வரும் இடங்களில் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT