கன்னியாகுமரி

குமரியில் ரசகதலி வாழைத்தார் விலை தொடர்ந்து அதிகரிப்பு

28th Aug 2019 07:28 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் ரசகதலி வாழைத்தார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலாக வாழை சாகுபடி உள்ளது. இங்கு  செவ்வாழை, நேந்திரன், மட்டி, ரசகதலி, பாளையங்கோட்டை, ரோபெஸ்டா  உள்ளிட்ட வாழைகள் அதிக அளவில் நடவு செய்யப்படுகின்றன.
இம்மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் நேந்திரன், செவ்வாழை, ரசகதலி உள்ளிட்டவை  கொண்டு செல்லப்படும் நிலையில், அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் வாழை ஏற்றுமதியைப்  பாதித்துள்ளன.
இதனால், குமரியில் நேந்திரன், செவ்வாழை உள்ளிட்ட வாழைத்தார்களின் விலை குறைவாகவே உள்ளது. பழக்கடைகளில் ஒரு கிலோ நேந்திரன் வாழைப் பழங்கள் தற்போது ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. செவ்வாழைப் பழங்கள் கிலோ ரூ. 70 வரை விற்பனையாகின்றன.
திருமண சீசன்: தற்போது, ஆவணி மாதம் பிறந்து திருமண சீசன் களைகட்டியுள்ளதால், ரசகதலி மற்றும் மட்டி வாழைத்தார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரசகதலி பழங்கள் பழக்கடைகளில் கிலோ ரூ. 100 வரை விற்பனையாகின்றன. மட்டி வாழைப் பழங்களும் கிலோவிற்கு ரூ. 70 வரை விலைபோகின்றன. 
ஓணம் பண்டிகையில்....கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் வரும் செப்டம்பர்  11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வாழைத்தார்களின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, வாழைக்குலைகளை அறுவடை செய்ய விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT