ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் விரிகோடு கள்ளத்தான்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (42). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி புஷ்பலதா (31). அதே பகுதி மடத்துவிளையைச் சேர்ந்த ரெஜி (38), இவரது மனைவி அஜிதா(34), சகோதரர் ஷாஜி(27). ரெஜி அடிக்கடி புஷ்பலதாவை ஆபாசமாக பேசி, கிண்டல் செய்து வந்தாராம்.
இதுகுறித்து புஷ்பலதாவின் கணவர் தட்டிக்கேட்டபோது, ரெஜி, ஷாஜி ஆகியோர் சேர்ந்துகொண்டு தகராறில் ஈடுபட்டனராம். இதனால், இரு குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், 5.7.2014இல் தனது ஊர் அருகே சென்றுகொண்டிருந்த ராஜனை ரெஜி, ஷாஜி, அஜிதா ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டினராம். மேலும், சம்பவத்தை அறிந்து தடுக்க வந்த ராஜனின் தம்பி விஜயகுமாரும் தாக்கப்பட்டார். இதில், ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயகுமார் உயிர்தப்பினார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து ரெஜி, ஷாஜி, அஜிதா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நம்பி, குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
மேலும், விஜயகுமாரை கொலை செய்ய முயன்றதாக ரெஜி, ஷாஜி இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஞானசேகரன் ஆஜராகி வாதிட்டார்.