கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

23rd Aug 2019 07:31 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இம்மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கன மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட  அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. பாசனக் குளங்களும் நிரம்பின. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கக்கூடிய முக்கடல் அணை மைனஸ் நிலையிலிருந்து பிளஸ் நிலைக்கு வந்தது. 
கடந்த சில நாள்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்து வந்த நிலையில், புதன்கிழமை சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை நாகர்கோவில் நகரில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அலுவலகம் செல்வோரும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர், மாணவிகளும் குடைகளை பிடித்தவாறு சென்றனர். 
நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகளான செம்மாங்குடி சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டாறு உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, குலசேகரம், தக்கலை, இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 17.20  அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 317  கன அடி நீர்வரத்து இருந்தது. 
அணையில் இருந்து 686 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 56.15  அடியாக இருந்தது. அணைக்கு, 113  கன அடி நீர்வரத்து இருந்தது. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவைக்காக முக்கடல் அணையிலிருந்து 7.42 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் குளிர்ந்த கால நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை பொழிவால் கன்னிப்பூ பருவ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT