கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது: மக்கள் அவதி

23rd Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம்,  குளச்சல் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால், 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இம்மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடலரிப்பும் ஏற்படுவது வழக்கம். இப்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஓரிரு நாள்கள் மழை இல்லாதபோதும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து, கடலரிப்பு ஏற்பட்டதால் குளச்சல், கொட்டில்பாடு, வாணியக்குடி, அழிக்கால் கடற்கரைக் கிராமங்களில் உள்ள மண்மேடுகளை அலைகள் இழுத்துச் சென்றன. இதனால், குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 
ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்கால் பகுதியில் கடல் கொந்தளிப்பால் ராட்சத அலைகள் ஏற்பட்டு, கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகள்வரை கடல்நீர் வந்து சென்றது. புதன்கிழமை நள்ளிரவு கடல் கொந்தளிப்பு அதிகமாகி,  2 மீட்டர் முதல் 3  மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பியதில்  கடற்கரைக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து, பொருள்கள் இழுத்துச் சென்றன. இதனால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அவர்கள் இரவு முழுவதும் வீடுகளிலிருந்து கடல்நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமையும் இதேநிலை நீடித்து, வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் தங்களது வீடுகளுக்குள் கடல்நீர் புகுவதைத் தடுக்க வாசல்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். 
ராஜாக்கமங்கலம் துறை, குளச்சல், மார்த்தாண்டம்துறை, இரயுமன்துறை, பூத்துறை பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், பெரும்பாலான மீனவர்கள் கரைதிரும்பினர்; வள்ளங்கள், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்தனர். கடல் கொந்தளிப்பு சனிக்கிழமை வரை (ஆக. 24) நீடிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடல் கொந்தளிப்பு குறித்து அனைத்து மீனவக் கிராமங்களுக்கும் அந்தந்த கிராமத்தின் பங்குத்தந்தைகள் மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
சம்பந்தப்பட்ட கிராமங்களை மீன்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். "ஆண்டுதோறும் இந்நிலை தொடர்வதால், ஊருக்குள் கடல்நீர் புகுவதைத் தடுக்க அலைத் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், இல்லையெனில் எங்களது கிராமமே அழிந்து விடும்' என, அதிகாரிகளிடம் மக்கள் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT