நாகர்கோவிலில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக அரசு அதிகாரி உள்ளிட்ட மூவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை இரவுக் காட்சி திரைப்படம் பார்ப்பதற்காக வந்த இளைஞர் ஒருவர்
2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுத்தாராம். அந்த நோட்டை பெற்ற திரையரங்கு ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இதுகுறித்து கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீஸார் சென்று திரையரங்க ஊழியர் தெரிவித்த இளைஞரை பிடித்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர் நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்ததும் தெரியவந்தது. ரமேஷ் தெரிவித்த தகவலின்பேரில், நாகர்கோவிலைச் சேர்ந்த தினகரன் (43), அருகுவிளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் மனோவா (45) ஆகியோரை போலீஸார் பிடித்தனர். இதில் தினகரன் கேரள மாநிலம் கொச்சியில் மத்திய அரசின் மீன் வளத்துறையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனிப்படை போலீஸார் மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.