கன்னியாகுமரி

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: நாகர்கோவில் அருகே பொதுமக்கள் முற்றுகை

18th Aug 2019 01:37 AM

ADVERTISEMENT


நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுசீந்திரம் அருகே என்.ஜி.ஓ. காலனி கோயில்விளையில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை திறக்க ஏற்பாடு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெண்கள், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் பாதிக்கப்படுவர். ஆகையால் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தினர். எனினும், அங்கு டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை அப்பகுதி பெண்கள் திரண்டு மதுக்கடை அமைய இருக்கும் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோயில்விளை, உடையப்பன் குடியிருப்பு, சின்னணைந்தான்விளை, மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
தகவலறிந்து வந்த ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, மதுசூதனபுரம் கிராம நிர்வாக அலுவலர் பிரதீப், போலீஸார் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயில்விளையில் டாஸ்மாக் கடை அமைக்கப் படுவதில்லை என எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT