நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையச் சாலையில் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகர்கோவில் சார் ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் சந்திப்பு
ரயில் நிலையத்தில் இருந்து முதலியார் தெரு வழியாக நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலை (கேப் ரோடு) சந்திப்பு வரையிலான பிரதானச் சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொது அமைதியின்மை, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு இச்சாலையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மட்டும் கனரக வாகனங்களில் சரக்கு ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு திங்கள்கிழமை (ஆக.19) காலை 5 மணி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.