கன்னியாகுமரி

சுதந்திர தின விழாவில் ரூ.12.33 லட்சம் நலத் திட்ட உதவிகள்

16th Aug 2019 09:40 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில்  நாகர்கோவில்,  வடசேரி அறிஞர்  அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ரூ.12.33 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத் முன்னிலையில், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் அவர் பறக்கவிட்டார். தொடர்ந்து, பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மொத்தம் 26 பயனாளிகளுக்கு   ரூ.12.33 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 50 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். 
தொடர்ந்து, மணலிக்கரை கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பருத்திவிளை சாந்தி நிலையம் சிறப்பு பள்ளி, கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.எம்.இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் பிஷப் ரெமிஜியூஸ் பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி, மயிலாடி எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியில், ஹெச்.வசந்தகுமார் எம்.பி., என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஏ.ஆர்.ராஹுல் நாத், சார் ஆட்சியர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), சரண்யா அரி (பத்மநாபபுரம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் ராமர், வட்டாட்சியர்கள் சுப்பிரமணியன், கோலப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT