கன்னியாகுமரி

அதிகாரிகளுடன் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

16th Aug 2019 09:37 AM

ADVERTISEMENT

நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்வரிசையில் இடம் ஒதுக்காததைக் கண்டித்து திமுக  எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில்  நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையின் முன்வரிசையில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர், எம்.பி. மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ.க்களுக்கு 2ஆவது வரிசையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
விழாவில் பங்கேற்க வசந்தகுமார் எம்.பி. மற்றும் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் (திமுக) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பின்வரிசையில் இருக்கை போடப்பட்டிருப்பதைப் பார்த்த சுரேஷ்ராஜன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, அரசு மரபுப் படி இருக்கை ஒதுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். அவரை சமாதானம் செய்ய முயன்ற அதிகாரிகளிடம், தனக்கு முன்வரிசை கோரி பிரச்னைக்கு வரவில்லை. ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு எங்கு இடம் அளிக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்பதற்காகவே வாதிட்டதாகக் கூறினார். அதிகாரிகள் முன்வரிசையில் இருக்கை ஒதுக்குவதாகக் கூறியும் அதை ஏற்க மறுத்த சுரேஷ்ராஜன், ஏற்கெனவே பின்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT