கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் நாகர்கோவில் பாலிடெக்னிக் கல்லூரி அணி சிறப்பிடம் பெற்றது.
2019-20ஆம் கல்வியாண்டுக்கான தமிழகம் மற்றும் புதுச்சேரி இண்டர் பாலிடெக்னிக் அத்லடிக் அசோஸியேஷன் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், கால்பந்து போட்டியில் நாகர்கோவில் மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி 2ஆம் இடமும், பழவிளை காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றன.
கூடைப்பந்து போட்டியில் ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும், நாகர்கோவில் கேப் பாலிடெக்னிக் கல்லூரி 2ஆம் இடமும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி 3ஆம் இடமும் பிடித்தன.
இறகுப்பந்து போட்டியில் மேலத்திடியூர் பி.எஸ்.என். பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும், மார்த்தாண்டம் வேதமாணிக்கம் நினைவு சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி 2ஆம் இடமும், ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றன.
வெற்றிபெற்ற அணியினரை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.
ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் வழிகாட்டுதலில், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சிவராஜ், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பால்துரை, சத்தியமூர்த்தி, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.