கன்னியாகுமரி

பழங்குடியின மக்களின் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்

11th Aug 2019 01:11 AM

ADVERTISEMENT


பழங்குடியின மக்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சன் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறைஅருகே மூக்கரைக்கல் காணிக்குடியிருப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக  பழங்குடி மக்கள் தின விழாவில் டேவிட்சன் பேசியது:  உலகளவில் பழங்குடியின  மக்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் கலைகள், பண்பாடு, கலாசாரம், கதைகள், மொழி, நடனம், வாழ்வியல் முறைகள்,விவசாய முறைகள், சமய சடங்குகள், வாழ்வியல் சடங்குகள், விளையாட்டுகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆக. 9 ஆம் நாளை ஐக்கிய நாடுகள் சபை உலக பழங்குடி மக்கள் தினமாக அறிவித்துள்ளது.
மேலும், பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் மொழிகள் பேச்சு வழக்கத்தில் இருப்பதால் காலப்போக்கில் அவை  மறைந்து போக வாய்ப்புள்ளது. எனவே, பழங்குடியின மக்களின் மொழிகளைஆவணப்படுத்துவதுடன் பாதுகாக்க வேண்டும். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணி எனப்படும் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இயற்கையோடு இயைந்த  வாழ்வு  நடத்தும் அவர்கள், வனங்களில் மலைகளில் 48 குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். வனங்களை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி வாழும் இவர்கள் தற்போது மனிதன் மற்றும் விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பழங்குடியின மக்களுக்கு விலங்குகளால் சேதமடையாத  எலுமிச்சை கன்றுகள், மாதுளை, சப்போட்டா ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கிங்ஸ்லி, சரஸ்வதிகாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT