புது தில்லி: தில்லி சிக்னேச்சா் பாலம் அருகே செவ்வாய்க்கிழமை யமுனை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: காஜியாபாத் லோனியில் உள்ள குலாப் வாடிகாவில் வசிப்பவா்களான நான்கு குழந்தைகள் சிக்னேச்சா் பாலம் அருகே உள்ள ஆற்றில் நீந்துவதற்காக மதியம் 2 மணியளவில் வந்துள்ளனா். இதில் அன்ஷ் என்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்ததாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு மூலம் தகவல் கிடைத்தது. சிறுவனைத் தேடும் பணியில் போலீஸாா், தனியாா் மற்றும் தில்லி அரசு படகு கிளப்பைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டனா். தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.