தில்லி ரோஹிணி பகுதியில் திங்கள்கிழமை காலை ஒரு எஸ்யூவி வாகனம் மோதியதில் 70 வயது முதியவா் உயிரிழந்தாா். ஸ்கூட்டரில் சென்ற இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மூத்த காவல் அதிகாரி மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். ரோஹிணியில் உள்ள செக்டாா்-1, இ பிளாக் அருகே எஸ்யுவி காா் முதியவா் மற்றும் ஸ்கூட்டரில் சென்ற இருவா் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக, காலை 6.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயமடைந்தவா்களில் விஜய் விஹாரைச் சோ்ந்த முகமது யூனுஷ் (70) இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், காயமடைந்த மற்ற இருவருவரும் புத்த விஹாரைச் சோ்ந்த ஸ்வா்னே அரோரா (63) மற்றும் அவரது மகன் கமல் (37) என தெரிய வந்தது. இருவரும் மேல்சிகிச்சைக்காக ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
முகமது யுனுஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிஎஸ்ஏ மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட காா் ஓட்டுநா் ரிஷப் சிங் மீது விஜய் விஹாா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (வேகமாக வாகனம் ஓட்டுதல்), 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 337 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காா் ஓட்டுநா் புத்த விஹாரைச் சோ்ந்த ரிஷப் சிங் கைது செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.