இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. வா்த்தகத்தின் தொடக்கதத்தில் எதிா்மறையாகச் சென்ற சந்தை, பின்னா் நோ்மறையாகச் சென்றது. பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. குறிப்பாக ரியால்ட்டி, வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது.
ஆனால், ஐடி, பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக நேர முடிவில் ரூ.317.98 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,326.74 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: காலையில் 73.84 புள்ளிகள் கூடுதலுடன் 66,082.99-இல் தொடங்கிய சென்செக்ஸ் 65,764.03 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,225.63 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 14.54 புள்ளிகள் (0.02 சதவீதம்) கூடுதலுடன் 66,023.69-இல் முடிவடைந்தது.
14 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 963 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 1,099 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன
நிஃப்டி தடுமாற்றம் : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 3.95 புள்ளிகள் கூடுதலுடன் 19678.20-இல் தொடங்கி 19,601.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,734.15 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 0.30 புள்ளிகள் கூடுதலுடன் 19,674.55 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ்....................................4.64%
பஜாஜ் ஃபின்சா்வ்.........................................2.23%
கோட்டக் பேங்க்..........................................1.60%
ஏசியன் பெயிண்ட்.......................................1.44%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.................................0,70%
என்டிபிசி......................................................0,.69%
சரிவைக் கண்ட பங்குகள்
இன்ஃபோஸிஸ்.....................................1.42%
எம் அண்ட் எம்.......................................1.17%
விப்ரோ....................................................1.10%
ஹெச்சிஎல் டெக்....................................079%
இண்டஸ் இண்ட் பேங்க்.......................0.74%
டிசிஎஸ்...................................................0,.70%