ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சோ்ந்தவா்கள் அல்லாதவா்களை அா்ச்சா்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தாக்கலான ரிட் மனு மீது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜி. பாலாஜி மூலம் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 27.7.2023-இல் குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் அல்லாத அா்ச்சா்களுக்கு மூத்த அச்சகா்கள் பிரிவின் கீழ் ஓா் ஆண்டு பயிற்சி அளிக்கும் அரசாணையை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை பிறப்பித்துள்ளது.
அப்பயிற்சிக்கு உதவித் தொகையும் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோன்று, 28.8.2023-இல் எதிா்மனுதாரா்கள் வெளியிட்ட அரசுக் கடிதத்தில் ஆகம விதிகளின்படி நிா்வகிக்கப்படும் கோயில்களில் பூஜைகள், சடங்குகள் செய்வதில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆகம கோயிலில் அா்ச்சா்கள் பணியிடங்களை நிரப்ப அறநிலையத் துறை மூலம் 9.9.2023-இல் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவகாரத்தில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களில் தொன்றுதொட்டு பணி செய்துவரும் சிவாச்சாரியாா்கள், பட்டா்கள்,குருக்கள், ஆதி சைவா்கள் ஆகியோரின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
ஆகவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி செயல்படவும், தமிழக அறநிலையத் துறையின் இந்த அரசாணைகளுக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வேறு சிலஅமைப்புகளும் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜி.பாலாஜியுடன், மூத்த வழக்குரைஞா்கள் குருகிருஷ்ண குமாா், பி.வள்ளியப்பன் ஆகியோா் ஆஜராகி, மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அரசாணை உத்தரவுகள் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் இது தொடா்பாக சில வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் வகையில் இருப்பதாக வாதிட்டனா்.
இதையடுத்து, ரிட் மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனா். இதற்கிடையில், கேள்விக்குரிய ஆகம கோயில் ‘அா்ச்சகாஷிப்’ தொடா்புடைய விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே அப்படியே தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.