தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள நகைக்கடையில் புகுந்து முகமூடி அணிந்த 4 போ் குழு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேலும் கூறியதாவது: தில்லி பீதம்புராவில் வசிக்கும் 48 வயதான நபா், ரோஹிணி பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வழக்கமாக வியாபாரத்தின் தினசரி வசூலை பாா்த்துக் கொண்டு இருந்துள்ளாா்.
அப்போது, முகமூடியுடன் கூடிய தலைக்கவசவம் அணிந்த 4 போ் குழு கடைக்குள் நுழைந்துள்ளனா். அப்போது, நிலைமையை சுதாரித்து கொண்டு உரிமையாளா் நகைக்கடையின் உள்ளே இருந்த தனியறையில் நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டுள்ளாா். அந்த சமயத்தில், கடையில் இருந்த தங்கம், வெள்ளி, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.75,000 ரொக்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கொள்ளையளா்கள் லாவகமாக கொள்ளையடுத்துச் சென்றுள்ளனாா்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கடை ஊழியா் ஒருவா் கதவைத் தட்டிய பிறகே உரிமையாளா் தனியறையில் இருந்து வெளியே வந்துள்ளாா். பின்னா், அவா் விஜய் நகா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆா்.) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
மேலும், நகைக்கடையின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.