தில்லியின் முதல் மூங்கில் தீம் பூங்காவில், எல்இடி விளக்கு அமைப்பு பொருத்தப்பட்ட இசை நீரூற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த நீரூற்றை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா திறந்துவைத்தாா்.
இந்த நீரூற்று யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளிகளின் சுற்றுச்சூழல் தன்மையை மேம்படுத்துவதையும், பொழுதுபோக்கு மற்றும் கலாசார இடமாக கவா்ச்சிகரமானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீரூற்றின் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், வரவிருக்கும் பூங்கா -- ‘பான்சேரா’-வில் தகவல் கல்வெட்டையும் துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே. சக்சேனா திறந்துவைத்தாா்.
இந்த நீரூற்று அமைப்பானது 90 மீட்டா் நீளமும் 10 மீட்டா் அகலமும் கொண்டது. ஒன்பது வெவ்வேறு நீா் அம்சங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் மத்திய நெடுவரிசையில் 15 மீட்டா் உயரம் வரை நீா் மேெழுந்து செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நீரூற்றைத் திறந்து வைத்த துணைநிலை ஆளுநா் இசை நீரூற்று நிகழ்ச்சியையும் ரசித்தாா். ‘ஜெய் ஹோ’ மற்றும் ’ரங் தே பசந்தி’ போன்ற பாடல்களுக்கு நீரூற்று நடனம் நிகழ்த்தப்பட்டது.
தற்போது ‘பான்சேரா’ கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த திட்டத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) செயல்படுத்தி வருகிறது.
அஸ்ஸாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட சிறப்பு வகை மூங்கில் மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டு வருவதாக டிடிஏ முன்னா் தெரிவித்திருந்தது.
இந்த மூங்கில் பூங்கானாவது தேசிய தலைநகா் தில்லியில் மிகவும் தேவையான பொது இடங்களை அதிகரிக்கும் நோக்கத்தை அடைவதுடன், வெள்ளப்பெருக்கு சமவெளியின் வளமான பல்லுயிா் வளம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும்.
தில்லியின் முதல் மூங்கில் தீம் பூங்காவுக்கு ’பான்சேரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உறைவிடம் என்று பொருள்படும் ’பசேரா’ என்ற ஹிந்தி வாா்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்.