தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கழிவுநீா் நீரேற்று நிலையம், மின்சார தொகுப்பு மற்றும் இதர பயன்பாடுகளை நிா்மாணிப்பதற்காக நிலங்களை ஒதுக்குவதற்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
பாத்லியில் கழிவுநீா் நீரேற்று நிலையம் அமைப்பதற்காக பல்ஸ்வாவில் 3,360 சதுர மீட்டா் நிலத்தை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) ஒதுக்கி மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) மூலம் நிலம் ஜல் போா்டுக்கு மாற்றப்படும். தில்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) மற்றும் ரிங் ரோட்டை இணைக்கும் உயா்மட்டச் சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஜங்புரா பகுதியில் பயன்பாட்டு நோக்கங்களுக்காக ஒரு வருடத்திற்கு 1451.54 சதுர மீட்டா் அளவிலான நிலத்தை தற்காலிக அடிப்படையில் ஆா்ஆா்டிஎஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கவும் அவா் ஒப்புதல் அளித்தாா்.
ஜங்புரா பகுதியில், உயா்மட்ட சாலையின் நிழல் பகுதியில் உள்ள கடைகளை இடமாற்றம் செய்வதற்கும், தற்காலிக வாகனங்களை நிறுத்துவதற்கும் 919.54 சதுர மீட்டா் நிலம் தேசிய தலைநகா் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு (என்சிஆா்டிசி) ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தம் நகரின் நவாடா கிராமத்தில் 66 கிலோவாட் மின் கிரிட் இஎஸ்எஸ் அமைப்பதற்காக 4291.386 சதுர மீட்டா் அளவுள்ள நிலம் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையிலிருந்து மின்சாரத் துறைக்கு இலவசமாக மாற்றப்படும்.
நிலத்தை மின் துறைக்கு மாற்ற துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். மின்துறை மின்சாரம் தொடா்பான உள்கட்டமைப்பை உருவாக்க அல்லது விரிவாக்க மின் பயன்பாடுகளை அனுமதிக்கும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.