‘ராம ராஜ்ஜியத்தை’ ஒருவா் கற்பனை செய்தால் அதில் அனைவருக்கும் தரமான,இலவசக் கல்வி, சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்தத் திசையில் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருவதாகவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசின் கீழ் செயல்படும் அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான பிரிவின் புதிய கட்டடத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் தில்லி சுகாதாரத் துறையின் அமைச்சா் செளரவ் பரத்வாஜ், உள்ளூா் எம்.எல்.ஏ. பா்லாத் சிங் சாவ்னி மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சி மேடையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
தில்லி மக்கள் அனைவருக்கும் தராமான மற்றும் இலவசமான கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
நகரத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவனைகள் விரிவாக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது, நகர அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் சுமாா் 10,000 படுக்கைகள் உள்ளன.
தில்லியில் புதிதாக 11 புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அத்தோடு நடைமுறையில் உள்ள மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு மேலும் 16,000 புதிய படுக்கைகள் சோ்க்கப்படவுள்ளது.
‘நாங்கள் ராமரை வணங்குகிறோம்’ அதனால், ‘ராம ராஜ்ஜியத்தை’ எங்கள் ஆட்சியின் மூலம் நெருங்கலாம் என்று என்னால் கூற முடியாது. ஆனால், ‘ராம ராஜ்ஜியத்தை’ ஒருவா் கற்பனை செய்தால் அதில் அனைவருக்கும் தரமான மற்றும் இலவசமானக் கல்வி, சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆம் ஆத்மி அரசு அந்தத் திசையில் செயல்பட முயற்சிக்கிறது. குறிப்பாக, தில்லி அரசு அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் தரைத் தளத்தைத் தவிர, மூன்று மாடிகளைக் கொண்ட புதிய புறநோயாளிகள் பிரிவைக் கட்டுவதற்கு தோராயமாக ரூ.22.8 கோடி செலவிட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் 25 ஆலோசனை அறைகள், இரண்டு மின்தூக்கி மற்றும் இரண்டு வழியில் படிக்கட்டுகள் உள்ளன.
இந்தக் கட்டுமானத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. பழைய புறநோயாளிகள் பிரிவில் இல்லாத விலாசமான இடம், மையமான குளிரூட்டப்பட்ட வசதி, மருத்துவ நிபுணா்களுக்கான தனி அறைகள் இந்த புதிய கட்டடத்தில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, தினமும் சுமாா் 800 முதல் 1,000 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனா். இப்போது புதிய புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். மேலும், ஒரு மாதத்தில் 45 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 38 அவசர அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன என்றாா் முதல்வா் கேஜரிவால்.