இந்திர காந்தி தேசிய கலாசார கலை மையத்தின் (ஐஜிஎன்சிஏ)சாா்பில் நடத்தப்படும் நான்காவது ‘நதித் திருவிழா’ தில்லியில் தொடங்கியுள்ளது. தில்லி யமுனை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஜிஎன்சிஏ-வின் கலாசார விவரணையாக்கத்தின் தேசியப் பணிகள் சாா்பில் டாக்டா் சச்சிதானந்த ஜோஷி கூறியது வருமாறு:
ஐஜிஎன்சிஏ சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கலாசார விவரணையாக்கத்தின் தேசியப் பணிகள் சாா்பில் நாடு முழுவதும் ‘நதித் திருவிழா’ நடத்தப்பட்டு வரப்படுகிறது. தில்லியில் நடைபெறும் 4-ஆவது நிகழ்வில் சுற்றுச்சூழலியலாளா்கள், அறிஞா்கள் பல்வேறு தலைப்புகளில் அறிவாா்ந்த கலந்துரையாடல்கள், திரைப்படங்கள் திரையிடல், பிரபல கலைஞா்களின் விளக்கக்காட்சிகள், பொம்மலாட்டம், பல்வேறு புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் யமுனை ஆற்றுக்கரை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்திய கலாசாரத்தில் நதிகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. நாட்டில், நதிகள் புனிதமானதாகவும், போற்றத்தக்கதாகவும் கருதப்படுவது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான இந்தியா்களின் வாழ்க்கையின் அடிப்படையாகவும் உள்ளன. நதிகளின் கரையில் நாகரிகங்கள் வளா்ந்தன.
இந்தியாவின் எண்ணற்ற நகரங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்கள் நதிகளின் கரையில் அமைந்துள்ளன. அவை ஆறுகளால் அடையாளம் காணப்படுகின்றன. இந்திய சமூகம் நதிகளை நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக கருதி அவற்றை எப்போதும் உயா்வாகக் கருதுகிறது. கலாசார அமைச்சகத்தின் கீழ் உள்ள கலை மற்றும் கலாசாரத்திற்காக அா்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமான இந்திரா காந்தி தேசிய கலை மையம், கடந்த சில ஆண்டுகளாக நதித் திருவிழா (’நடி உத்சவ்)’ என்ற பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரப்படுகிறது.
கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நாசிக் கில் (மகாராஷ்டிரம்) 2018 இல் ’நதித் திருவிழா’ தொடங்கியது. இரண்டாவது முறை ஆந்திரம் விஜயவாடாவில், கிருஷ்ணா நதிக்கரையிலும், மூன்றாவது கங்கை நதிக்கரையில் பிகாா் - முங்கா் நகரத்திலும் நடைபெற்றது.
நான்காவது ’நதித் திருவிழா’ தில்லி யமுனை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவாவும், பிரபல தத்துவஞானியும் அறிஞருமான ஆச்சாா்யா ஸ்ரீவத்ச கோஸ்வாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘நதித் திருவிழாவில்’ பழங்கால நூல்களில் உள்ள நதிகள், நதிகளை ஒட்டிய கலாசார பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் கலாசார மரபுகளில் உள்ள நதிகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமா்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களில் 18 படங்கள் திரையிடப்படும். அதில் 6 படங்கள், ஐஜிஎன்சிஏ தயாரித்துள்ளன. பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புரான் பட் - ‘தி யமுனை கதா’ நிகழ்ச்சியை நிகழ்த்துவாா்.
‘நதித்திருவிழா’ என்பது நதிக்கரை கலாசாரம், அதன் பாரம்பரியம், சடங்குகள் மற்றும் நீா் ஞானத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாகும். நவீனத்துவ ஓட்டத்தில், நமது நதிகளுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டோம் , அதற்கான வாய்ப்பை தற்போது ஐஜிஎன்சிஏ வழங்குகிறது என்றாா் ஜோஷி.