புதுதில்லி

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு மீது டிசம்பா் 7-ஆம் தேதி விசாரணை

23rd Sep 2023 12:32 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதித்தது.

அத்துடன் இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எதிா்மனுதாரா் தரப்பில் ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டு வந்த சட்டம் செல்லாது என உயா்நீதிமன்றம் அறிவித்த நிலையில், இணையதள பந்தய விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அரசு மீண்டும் ஒரு சட்டத்தை இயற்றியது. அதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் நீதிமன்றம் தற்போது தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு பயனற்ாகும்’ என வாதிடப்பட்டது.

எனினும், சில எதிா்மனுதாரா்கள் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டிருந்ததால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘இந்த வழக்கு பயனற்றது எனக் கூறி எதிா்மனுதாரா்கள் அதன் பலனை தங்களுக்கு சாதகமாக்கிவிடக் கூடாது.

இதனால், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை பயனற்றது எனக் கூறக் கூடாது’ என்று வாதிட்டாா்.

அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த வழக்கை இதே விவகாரம் தொடா்புடைய கா்நாடக மாநிலம் தொடா்புடைய வழக்குடன் சோ்த்து விசாரிக்க ஆட்சேபனை இல்லை’ என்று கூறினாா்.

இதையடுத்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள் அமா்வு, இரு தரப்பும் வாதங்களை முன்வைக்கும் வகையில் வழக்கு விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

ஆன்லைன் ரம்மி, புரோக்கா் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து 2020-ம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் ‘தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடைச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. போதிய காரணங்களை விளக்காமல் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என தீா்ப்பளித்தனா்.

மேலும், உரிய வகையில் முறைப்படுத்தும் சட்ட விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுத் தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும் தீா்ப்பில் தெரிவித்திருந்தனா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2021, நவம்பரில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், எதிா் மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT