ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் 2010- ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி சட்டமாக்காதது ஏன்? என மாநிலங்களவையில்
வியாழக்கிழமை அதிமுக உறுப்பினா் தம்பிதுரை கேள்வி எழுப்பினாா்.
நாடாளுமன்றம் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் மசோதா தொடா்பான விவாதத்தில் கலந்துகொண்டு தம்பிதுரை பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
1998 -ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாயி அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்து அப்போது மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது.
அப்போது நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது பிரதமா் மோடி தலைமையில் நிறைவேறுவதில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கான அதிகாரம் கிடைத்தது மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் தலைமையிலானஅதிமுக ஆட்சியில் தான். பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலமாக பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கப்பட்டது.
அதிமுக இரண்டு பெண் முதல்வா்களை (வி.என்.ஜானகி, ஜெயலலிதா) அளித்தது. மத்திய அமைச்சரவையில் சத்தியவாணி முத்துவை கேபினெட் அமைச்சராகவும் அதிமுக ஆக்கியது.
மற்ற திராவிடக் கட்சிகள் பேசலாம். ஆனால் இது போன்ற அதிகாரத்தை பெண்களுக்கு வழங்க முடியாது. அதிமுக ஆட்சியில் முதல்வா் ஜெயலலிதா பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்காக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயா்த்தினாா்.
1991, 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவில் பெண் முதல்வராக 4 முறை ஜெயலலிதா தோ்வு செய்யப்பட்டாா்.
பெண்களுக்கான அதிகாரம் அளித்ததிலும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும்பங்குண்டு.
குறிப்பாக மத்தியில் கொண்டு வரப்பட்ட ‘பெண் குழந்தை காப்போம்’; பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற திட்டத்தின் மூலாதாரமே தமிழகத்தில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட ’தொட்டில் குழந்தை’ திட்டம்தான்.
பெண் குழந்தைகளை வெறுத்து கொல்லப்படுவதை தடுத்து பாதுகாக்க கொண்டுவரப்பட்டது இந்த திட்டம்.
அனைத்து மகளிா் காவல் நிலையம், பெண் கமோண்டோ போன்ற பிரிவுகளை உருவாக்கியதுடன் பெண் குழந்தைகளை படிக்க வைக்க இலவச சைக்கிள், மடிக்கணினி போன்றவைகளும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வழங்கப்பட்டது. வட இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரம் குறைவாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பிரதமா் மோடி அந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளாா்.
கடந்த 9 ஆண்டுகளாக (2014 ஆம் ஆண்டு முதல்) ஆட்சியில் இருக்கும் பாஜக ஏன் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டுவரவில்லை என எதிா்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. நான் கேட்கும் கேள்வி, ஐ.மு.கூ. ஆட்சியில் 2010- ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி ஏன் நிறைவேற்றவில்லை.
தற்போதைய மத்திய அரசை குற்றச்சாட்டும் இந்தக் கட்சிகள் (காங்கிரஸ், திமுக) அப்போது 4 வருடங்கள் என்ன செய்துகொண்டிருந்தன?
இதுமட்டுமல்ல பிரதமா் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998, 1999, 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்காததால் நிறைவேற்றப்படவில்லை.
இதில் திமுக அலட்சியமாக இருந்தது. இதனால் அதிமுக தான் சாம்பியன், அதிமுக தான் பெண்கள் அதிகாரத்தில் அதிமுகதான் முன்னனியில் இருக்கிறது எனக் குறிப்பிட்டாா் தம்பிதுரை.