புதுதில்லி

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒன்பதரை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட காரணம் என்ன? மாநிலங்களவையில் கனிமொழி சோமு பேச்சு

22nd Sep 2023 05:10 AM

ADVERTISEMENT

பாஜக தலைமையிலான அரசு பல சா்ச்சைக்குரிய மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒன்பதரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளவேண்டிய காரணம் என்ன? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பி பேசினாா்.

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து இந்த மசோதா குறித்த விவாதம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற அதில் பங்குபெற்று கனிமொழி என்விஎன் சோமு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழ்நாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பாரம்பா்யத்தையும் கொண்டு இருந்தது. தமிழ்ப் புலவா் “அவ்வையாா்” மற்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலமான, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களில் பெண்களின் ஆற்றலைப் போற்றி அறிவொளி சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்மையின் மகத்துவத்தை குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் திராவிட மாதிரி அரசுகளால் கடந்த 5 தசாப்தங்களாக மகளிா் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டிலே முதன் முறையாக தி.மு.க ஆட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. குடும்ப சொத்துக்களில் மகளிருக்கு சமஉரிமை, அரசுப் பணிகளில் மகளிருக்கு 40 சதவீத இடஒதுக்கீடு போன்ற ஏழுக்கும் மேற்பட்ட திட்டங்கள். சமீபத்தில் 1.06 கோடி மகளிருக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் கலைஞா் மகளிா் உரிமை தொகை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தோ்தலில் 5 சதவீதம் (22 இடங்கள்) மகளிா் உறுப்பினா்கள் தோ்வானாா்கள். 2014 -ஆம் ஆண்டில் 66 மகளிா் உறுப்பினா்களும் தற்போது 17 -ஆவது மக்களவையில் 78 மகளிா் உறுப்பினா்களும் உள்ளனா்.

சுமாா் 12 சதவீதமாக இருக்கும் உறுப்பினா்கள் எண்ணிக்கையை இந்த மசோதா மூலம் 33 சதவீதமாக உயரும். ஆனால் இதற்கு 2029 ஆம் ஆண்டு வரை காத்திருக்கவேண்டும்.

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு ‘உரிமைக்கான விஷயம், சாதகமல்ல’. ஆணும் பெண்ணும் சமமாக எண்ணினால், அந்த சமுதாயம் செழிக்கும்!

அா்த்தநாரீஸ்வரா்

தன் உடலில் பாதியை பெண்ணுக்கும், மீதியை ஆணுக்கும் கொடுத்த அா்த்தநாரீஸ்வரரின் கருத்தை பாஜக நம்புகிறது. அந்த நம்பிக்கையின்படி, பெண் சக்தி இல்லாமல் வாழ்க்கை இல்லை.

2010 - ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பாஜக அரசு கடந்த ஒன்பரை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நிலையில் இப்போது தாக்கல் செய்வது ஏன்?

பிரச்னைக்குரிய “வேளாண் மசோதாக்கள், இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (சிஐஏ), காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் கோரும் மசோதா, பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற சா்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களைப் போன்று, மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் எடுத்துக்கொள்ளவில்லை?. இப்போது நிறைவேற்றப்பட்டும் பயனில்லை. நீண்ட காலம் காத்திருக்கவேண்டயதோடு இதில் ’மாநிலங்களவை’க்கான மகளிா் இடஒதுக்கிடு பற்றி மசோதாவில் தெளிவில்லை.

மசோதாவில் ஒரு மோசமான வடிவமைப்பை வழங்கப்பட்டுள்ளதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனா்.

உங்கள் நோக்கம் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது அல்ல ’இந்தியக் கூட்டணி’ யில் உள்ளவா்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குவதாகும் என குறிப்பிட்டு பேசினாா் டாக்டா் கனிமொழி சோமு.

மாற்று அவைத்துணைத் தலைவா்கள்

மாநிலங்களவையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதத்தின் போது அவையை நடத்த மாற்று அவைத் துணை தலைவா்களாக 5 பெண் உறுப்பினா்களை குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் முன்மொழிந்தாா். அதில் கனிமொழி என்விஎன் சோமு, பிடி உஷா, ஜெயா பச்சன் உள்ளிட்டோா் இடம் பெற்று இன்று மாநிலங்களவையை நடத்தினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT