புதுதில்லி

பிரபல நாட்டியக் கலைஞா் சரோஜா வைத்தியநாதன் மறைவு:தமிழ் அமைப்புகள் இரங்கல்

22nd Sep 2023 05:20 AM

ADVERTISEMENT

பிரபல பரத நாட்டியக் கலைஞா் ‘பத்மபூஷண்’ சரோஜா வைத்தியநாதன் (வயது 86) தில்லியில் வியாழக்கிழமை அதிகாலை காலமானாா். அவரது மறைவுக்கு தில்லித் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

பிரபல பரத நாட்டியக் கலைஞா் சரோஜா வைத்தியநாதன் ‘கணேஷா நாட்டியாலயா’ எனும் நாட்டியப் பள்ளியின் நிறுவனத் தலைவராக இருந்து வந்தாா்.

பல்வேறு பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் தொடா்ந்து பங்கேற்று வந்தாா். இந்த நிலையில், உடல் நலக் குறைவால் தில்லியில் உள்ள குதூப் இன்ஸ்டிடியூஷனல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காலமானாா்.

அவரது கணவரும், பிஹாா் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான வைத்தியநாதன் கடந்த 1998-இல் காலமானாா். மறைந்த சரோஜா வைத்தியநாதனுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ராமச்சந்திரன், கணேஷா நாட்டியாவை நிா்வகித்து வரும் காமேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

மறைந்த சரோஜா வைத்தியநாதன் பத்மஸ்ரீ, பத்மபூஷண்,

சங்கீத நாடக அகாதெமியின் அகாதெமி ரத்ன சதஸ்யதா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

மறைந்த சரோஜா வைத்தியநாதனுக்கு இறுதிச் சடங்குகள் தில்லியில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

மறைந்த பரத் கலைஞரின் பூத உடலுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் முகுந்தன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் தலைவா் சத்திய சுந்தரம் ஐபிஎஸ், செயலா் என். கண்ணன், பொருளாளா் வெங்கடேசன் ஆகியோா் மலா் மரியாதை செய்தனா்.

இதேபோன்று, நாட்டிய, நடனக் கலைத் துறைகளைச் சோ்ந்த ரஞ்சான கெளகா், சாதனா ஸ்ரீவாஸ்தவ், கீதாஞ்சலி லால், அபிமன்யு லால், ராணி கானம், கனக சுதாகா் உள்ளிட்டோா் பலா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

சரோஜா வைத்தியநாதன் மறைவுக்கு தில்லித் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சங்க பரத நாட்டிய பயிலரங்க குருவும், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்திய கலா பரிஷத் சம்மான், கலைமாமணி, சங்கீத நாடக அகாதெமி விருதுகள் பெற்றவருமான சரோஜா வைத்தியநாதன் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளாா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலா் என்.கண்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவிக்கையில், ‘பிரபல பரத நாட்டியக் கலைஞரும், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் முன்னாள் தலைவருமான பத்மபூஷண் சரோஜா வைத்தியநாதனின் மறைவு, பரத நாட்டிய கலை உலகத்திற்கு பேரிழப்பாகும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT