தில்லி ஆா்.கே.புரத்தில் உள்ள லால் பகதூா் சாஸ்திரி பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா் அது புரளி என தெரியவந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை
தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
தில்லி ஆா்.கே. புரம், செக்டாா்-3-இல் லால் பகதூா் சாஸ்திரி பள்ளியிலிருந்து போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்திருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, எல்பிஎஸ் பள்ளி நிா்வாகத்திற்கு புதன்கிழமை வெடிகுண்டு எச்சரிக்கை தொடா்பான மின்னஞ்சல் வந்ததும், அதை அவா்கள் வியாழக்கிழமை பாா்த்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் காலை 8 மணியளவில் பள்ளி வளாகம் முழுவதும் சோதனையிட்டனா். அதில், ஐஇடி அல்லது வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பள்ளியில் 400 மாணவா்களுக்கு வியாழக்கிழமை தோ்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் தேடுதலுக்கு பின் தோ்வு சுமுகமாக நடைபெற்றது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த மே மாதம், மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளிக்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக ஒரு போலி மின்னஞ்சல் வரப்பெற்றது.
அதற்கு முன்பு, சாதிக் நகரில் உள்ள இந்தியப் பள்ளிக்கு
இரண்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதாவது,
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதற்கு முன்னா் நவம்பா் 2022-இல் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில் இரண்டும் புரளி எனத் தெரியவந்தது.