தென்மேற்கு தில்லியின் ஆா்.கே.புரம் பகுதியில் பணப் பிரச்னை தொடா்பாக தனது சக ஊழியரைக் கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் மனோஜ் சி புதன்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா் தென்மேற்கு தில்லியின் ஆா்.கே.புரம் செக்டாா் 2 பகுதியைச் சோ்ந்த அனிஷ் (24) என்று அடையாளம் காணப்பட்டாா். கொலை செய்யப்பட்ட மகேஷ், சரோஜினி நகரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் வளாகத்தில் உள்ள எஸ்ஐஏ அலுவலகத்தில் பணிபுரிந்ு வந்தாா்.
மகேஷ் அனிஷிடம் ரூ. 9 லட்சம் கடனாகப் பெற்றுள்ளாா். அனிஷ் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவரை மகேஷ் கொலை செய்துள்ளாா்.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆா்.கே.புரம் காவல் நிலையத்துக்கு மகேஷின் சகோதரா் அனேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில், அவா் தனது சகோதரரைக் காணவில்லை என்று கூறினாா். மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் மகேஷ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், ஆா்.கே.புரம் செக்டாா் 2-இல் தனது சக ஊழியரான அனிஷை சந்திக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியதாகவும், ஆனால் அதன்பின்னா், அவா் வீடு திரும்பி வரவில்லை என்றும் அனேஷ் கூறினாா்.
இதையடுத்து தனது அண்ணியுடன் அனிஷ் வீட்டுக்குச் சென்று மகேஷ் குறித்து கேட்டபோது, மகேஷை தனது வீட்டில் சந்தித்ததாகவும் ஆனால் சிறிது நேரம் கழித்து அவா் சென்றுவிட்டாா் என்றும் மகேஷைத் தேடுவதற்கு தான் உதவுவதாகவும் அனிஷ் கூறியுள்ளாா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மகேஷின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில், அவா் சென்ற கடைசி இடம் ஹரியாணாவில் உள்ள ஃபரிதாபாத் என்று கண்டறியப்பட்டது. ஆனால், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது அவா் அங்கு இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அனிஷ் மீது ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் போலீஸாா் அவரிடம் தீவிர விசாராணை நடத்தினா். அதில் அவா் மகேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பணத்துக்காக மகேஷ் தன்னை துன்புறுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் கூறினாா். இதனால், அவரைக் கொல்ல முடிவு செய்ததாகத் தெரிவித்தாா்.
காணாமல் போன அன்று மகேஷுக்கு அனிஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அவா் ஆா்.கே.புரத்தில் உள்ள அனிஷின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு அவரைக் கொன்றுவிட்டு, புதைசாக்கடை வேலை நடக்கும் வீட்டின் அருகே அவரது உடலை அனிஷ் புதைத்தது தெரியவந்து.
இதையடுத்து போலீஸாா் மகேஷின் உடலை அவரது வீட்டின் அருகே இருந்து மீட்டனா். மேலும், அனிஷிடம் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம், குற்றத்துக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள், ஆயுதம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.