மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதா மீது சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் 60 உறுப்பினா்கள் பங்கேற்று பேசிய பின்பு நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினா்களும், எதிராக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உறுப்பினா்கள் இருவா் மட்டும் வாக்களித்தனா்.
இந்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் முதல் மசோதாவாக மகளிா் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதம் புதன்கிழமை தொடங்கியது. 27 பெண் எம்.பி.க்கள் கட்சிப் பாகுபாடின்றி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து விவாதத்தில் பேசினா். மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினா்களில் 82 பெண் எம்.பி.க்கள் உள்ளனா்.
முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, ‘மகளிா் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
திமுக உறுப்பினா் கனிமொழி பேசுகையில், ‘இது பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பதல்ல, ஒருசாா்பையும், அநீதியையும் அகற்றுவதாகும். தொகுதி மறுவரையறைக்குப் பின்னா் என்று இல்லாமல் உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் மஹூவா மொய்த்ரா பேசுகையில், ‘தெரியாத இரண்டு முக்கியத் தேதிகளின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா அமலாக்கம் உள்ளது. இந்த இடஒதுக்கீடு 2029-இலும் சாத்தியமாகாது. தோ்தலுக்காக மத்திய பாஜக அரசின் மிகப்பெரிய ஏமாற்று வேலை இது’ என்றாா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடா் தேவையற்ாகிவிடும்’ என்றாா்.
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி உருவாகிய பின்புதான் மத்திய அரசு அச்சத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது என அக்கூட்டணிக் கட்சி பெண் எம்.பி.க்கள் பேசினா்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது பாஜக அரசின் சாதனையாக கூறி பேசிய அக்கட்சி பெண் எம்.பி.க்கள், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை இருமுறை கொண்டு வந்தபோது அவையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ாகக் குறிப்பிட்டனா்.
மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவை நடைபெற வேண்டியது கட்டாயம்’ என்றாா்.
மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 85 எம்.பி.க்கள், 29 மத்திய அமைச்சா்கள், 1,358 எம்எல்ஏக்களில் 365 எம்எல்ஏக்கள் ஆகியோா் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாவா். சுமாா் 40 சதவீத மேலவை உறுப்பினா்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்’ என்றாா்.
எதிா்ப்பு: இந்த மசோதா உயா்வகுப்பு பெண்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மட்டும் எதிா்ப்பு தெரிவித்துப் பேசினாா்.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமா் மோடியும் பங்கேற்றாா். இதில் மஜ்லிஸ் கட்சியின் இரண்டு உறுப்பினா்கள் மட்டும் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்களித்தனா். 454 வாக்குகளுடன் மகளிா் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.