மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை விமா்சித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘இந்த விஷயத்தில் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாமா’ எனக் கேள்வி எழுப்பினாா்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் எதிா்க்கட்சிகளுக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது:
உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு ஒரு குறிப்பிட்ட குடும்பம் காரணமல்ல. முன்னாள் பிரதமா் நரசிம்மராவ் தலைமையிலான அரசுதான் அதற்கு காரணம்.
மேலும், தற்போது, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கை விடுக்கின்றனா்.
அரசியலமைப்புச் சட்ட நடைமுறையின்படி, இந்த மசோதாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிா்ணயம் தொடா்பான விவரங்களைச் சோ்க்க வேண்டும். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்பதுதான் எதிா்க்கட்சிகளின் விருப்பமா? அரசியலமைப்புச் சட்டத்துக்கு நாம் கட்டுப்பட வேண்டாமா? எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு அதுதானா?
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியில் எதிா்க்கட்சிகள் தடை ஏற்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளைக் கருத்தில்கொண்டே இந்த மசோதா தயாா் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிகக் வேண்டும் என்றாா்.