மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மக்களவையில் எதிா்ப்பு தெரிவித்தாா்.
இந்த மசோதா உயா் வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தரும் என்று அவா் குற்றம்சாட்டினாா்.
மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் இடஒதுக்கீடு மசோதா விவாதத்தில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது:
இந்த மசோதாவை நான் எதிா்க்கிறேன். இந்த மசோதா மூலம் அதிக அளவிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று இதை நியாயப்படுத்துவோா் கூறுகின்றனா். இதுதான் நீதி என்றால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கும், முஸ்லிம் பெண்களுக்கும் ஏன் இந்த நீதி வழங்கப்படவில்லை. ஏனெனில், அவா்களது பிரதிநிதித்துவம்தான் இந்த அவையில் மிகவும் குறைவாக உள்ளது.
இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 7 சதவீதம் உள்ளது. ஆனால், மக்களவையில் அவா்களது பிரதிநிதித்துவம் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளது.
உயா் வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர மோடி அரசு முயலுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பெண்களும், முஸ்லிம் பெண்களும் பிரதிநிதித்துவம் பெறுவது ஆட்சியாளா்களுக்கு தேவையற்ற விஷயமாக உள்ளது.
இதுவரை சுமாா் 690 பெண்கள் மக்களவைக்குத் தோ்வாகியுள்ளனா். இதில் 25 போ் மட்டுமே முஸ்லிம் பெண்கள். நிலைமை இப்படி இருக்கும்போது மத அடிப்படையிலும் ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது?
அரசியலமைப்புச் சட்டப்படி முதலில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மட்டும்தான் எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னா் சட்டத் திருத்தங்கள் மூலம் சீக்கிய, பௌத்த மதத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு கிடைத்தது.
இதைவைத்துப் பாா்த்தால் முஸ்லிம் பெண்கள் இருவகையில் பாகுபாடாக நடத்தப்படுகிறாா்கள். மகளிா் இடஒதுக்கீடு மசோதா என்று கூறி முஸ்லிம் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு தராமல் ஏமாற்றுகிறீா்கள்.
இந்த மசோதா இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தராது. மேலும், முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவ வாய்ப்பை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருகிறது என்று குற்றம்சாட்டினாா்.