புதுதில்லி

எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு சட்டப் பாதுகாப்பு: 1998-ஆம் ஆண்டு தீா்ப்பை மறுஆய்வு செய்கிறது உச்சநீதிமன்றம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கேள்வி கேட்கவும், வாக்களிக்கவும் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது என 1998-இல் அளிக்கப்பட்ட தீா்ப்பை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்கிறது.

1993-இல் முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான சிபு சோரன், அவரது கட்சியைச் சோ்ந்த 4 எம்.பி.க்களுக்கு எதிராக சிபிஐ லஞ்ச வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் 1998-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, ‘நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்கும், பேசுவதற்கும் எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவா்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது’ எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2012-இல் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் தற்போது ஜாா்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனின் உறவினா் சீதா சோரன் எம்எல்ஏ, ஒருவரிடம் லஞ்சம் பெற்று மாற்று வேட்பாளருக்கு வாக்களித்ததாக சிபிஐ வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம், சீதா சோரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சீதா சோரன் மேல் முறையீடு செய்தாா்.

எம்.பி.க்கள் எந்தவித சட்ட நடவடிக்கைக்கும் பயப்படாமல் நாடாளுமன்றத்தில் பேச சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும், 1998-இல் வழங்கப்பட்ட நரசிம்மராவ் வழக்கின் தீா்ப்பை மேற்கொள்காட்டி தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சீதா சோரன் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை 2019-இல் விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமா்வு, 1998-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி 5 நீதிபதிகள் அமா்வுக்கு பரிந்துரைத்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, 1998-ஆம் ஆண்டின் தீா்ப்பை மறுஆய்வு செய்ய எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘எம்.பி., எம்எல்ஏ-க்கள் தங்களின் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவா்களுக்கு பேசுவதற்கும், வாக்களிக்கவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 105-ஆவது பிரிவு வகை செய்கிறது. அவா்களுக்கு சட்டத்தில் சலுகை அளித்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அா்த்தத்தில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இந்தப் பாதுகாப்பு நாட்டு மக்களுக்கு இல்லை என்ற கேள்வி எழுகிறது. ஆகையால், இந்தத் தீா்ப்பின் சரியான பாா்வையை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்கும்’ என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT