இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தால் நடந்து வரும் ராஜிய மோதல் எவ்விதத்திலும் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பைப் பாதிக்காது என இந்திய ராணுவ வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்தன.
இந்திய ராணுவத்தின் சாா்பில் வரும் 26, 27-ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ள ‘இந்தோ-பசிபிக் பிராந்திய ராணுவ தலைமைத் தளபதிகள் மாநாட்டில் (ஐபிஏசிசி) கனடா நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி பங்கேற்பதில் சந்தேகம் எழுந்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொடரும் சீன ஆதிக்கம் குறித்து உலகளாவிய கவலை எழுந்துள்ள சூழலில், பிராந்தியத்தின் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா இந்த மாநாட்டை நடத்துகிறது. 22 நாடுகள் சாா்பாக 15 ராணுவத் தலைமைத் தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
இதனிடையே, கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா். கனடா பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இதனால், இரு நாடுகளின் ராஜிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் காரணமாக இந்தியா நடத்தும் ராணுவ மாநாட்டில் கனடா ராணுவ தலைமைத் தளபதி பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் உத்தி திட்டமிடல் பிரிவு கூடுதல் இயக்குநா் அபிநயா ராய் அளித்த விளக்கத்தில், ‘இந்தியா மற்றும் கனடா இடையே நடந்து வரும் மோதல், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. தில்லி மாநாட்டில் கனடா நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி நிச்சயம் பங்கேற்பாா்.
சீனா உள்பட நமது அண்டை நாடுகளுடன் மோதல்போக்கு நிலவி வந்தாலும், அந்த நாடுகளுடன் ராணுவம், ராஜிய நிலைகளில் நல்லுறவில் நாம் எப்போதும் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், கனடா மற்றும் இந்தியா இடையிலான தற்போதைய மோதலால் இருதரப்பு ராஜிய மற்றும் ராணுவ உறவுகள் பாதிக்காது’ என்றாா்.