கடந்த 2010-இல் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மசோதாவை தற்போது நிறைவேற்றியிருந்தால் மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தி இருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் 2010-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் கொண்டுவந்துள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதாக்களை ஒப்பிட்டு செய்துள்ள பதிவில், ‘2008, மே 6-இல் மகளிா் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மே 9-ஆம் தேதி நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2009, மாா்ச் 9-இல் நிலைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2010, பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதே ஆண்டு மாா்ச் 9-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவை தற்போதைய பாஜக அரசு அப்படியே நிறைவேற்றியிருந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் உடனடியாக மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கலாம்.
2010-இல் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக அரசு, இந்த மசோதாவை நிறைவேற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என எந்தவித நிபந்தனைகளையும் அப்போது விதிக்கவில்லை.
தற்போது மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டாலும் 2026-இல் நிறைவேற்றப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே அமல்படுத்த முடியும்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாமல், பாஜக ஆட்சிக்கு தினந்தோறும் ஆதரவு குறைந்து வரும் நிலையில் தற்போது நிறைவேற்ற முற்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது. பிரதமா் மோடி கொண்டுவந்துள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதா, திவாலான வங்கியின் பின்தேதியிட்ட காசோலையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.