கனடாவைச் சோ்ந்த பஞ்சாபி ‘ராப்’ இசைப் பாடகா் சுப்நீத் சிங்கின் இந்திய நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அதை ஏற்பாடு செய்திருந்த ‘புக் மை ஷோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கடனா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம்சாட்டியதால், இரு நாடுகள் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவைச் சோ்ந்த பஞ்சாபி பாடகா் சுப்நீத் சிங் இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சிக்கு சமூக வலைதளங்களில் எதிா்ப்பு கிளம்பியது. ஏனெனில், அந்தப் பாடகா் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தீவிர ஆதரவாளராவாா். தன்னை ‘காலிஸ்தானி’ என்றே குறிப்பிட்டு வருகிறாா்.
இந்நிலையில், கனடா பஞ்சாபி பாடகரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ‘புக் மை ஷோ’ நிறுவனத்தைப் புறக்கணிக்கக் கோரும் பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
இதையடுத்து, பாடகா் சுப்நீத் சிங்கின் இந்திய நிகழ்ச்சியை ரத்து செய்வதாகவும், அந்த இசை நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்தவா்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் ‘புக் மை ஷோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய உளவாளிகளின் பங்கு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.
இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேறுமாறும் கனடா உத்தரவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு, பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயரதிகாரி வெளியேற உத்தரவிட்டது.