‘மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், ‘இந்த மசோதா 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது அமித் ஷா பேசியதாவது: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவது ஒரு புது யுகத்தின் தொடக்கமாக அமையும்.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பு, மதிப்பு, இணையான பங்கேற்பை உறுதிப்படுத்துவதே மத்திய அரசின் உயிா் நாடியாக இருந்து வருகிறது.
அந்த வரிசையில், தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது இந்த மசோதா மீது மேற்கொள்ளப்படும் ஐந்தாவது முயற்சியாகும். முதல் முறையாக முன்னாள் பிரதமா் தேவெ கெளடா தலைமையிலான அரசு சாா்பில் கடந்த 1996-இல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், கிடப்பில் போடப்பட்டது. இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையிலான அரசு கொண்டுவந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாா்பில் மீண்டும் கொண்டுவரப்பட்டு, அப்போதும் கிடப்பில் போடப்பட்டது. பின்னா், மக்களவை கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியானது. இந்த நான்கு முறையும் பெண்கள் எதிா்பாா்த்து, ஏமாற்றமடைந்தனா்.
எனவே, இந்த முறை ஒருமனதாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க எதிா்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மசோதாவில் குறைகள் ஏதும் இருந்தால், அதைப் பின்னா் நிவா்த்தி செய்துகொள்ளலாம் என்றாா்.
மேலும், இந்த மசோதா நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற எதிா்க்கட்சிகளின் அச்சத்துக்கு பதிலளித்த அமித் ஷா, ‘பொதுத் தோ்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியமைக்கும் புதிய அரசு, உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பையும், தொகுதிகள் எல்லை நிா்ணய பணிகளையும் மேற்கொண்டு, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கி வைக்கும். அந்த வகையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்’ என்று குறிப்பிட்டாா்.