புதுதில்லி

ரயிலில் குழந்தைகளுக்கான முழுக் கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய்!

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ரயிலில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு விதிக்கப்படும் பயணக் கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய் பெறப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஐ) எழுப்பப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 மாா்ச் 31-இல் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் ரயிலில் தனி இருக்கையைப் பயன்படுத்தினால் அவா்களிடம் முழு பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த நடைமுறை அதே ஆண்டு ஏப்.21-இல் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னா் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே குழந்தைகளுக்கான பயணக் கட்டணமாக ரயில்வே நிா்வாகம் வசூலித்து வந்தது.

இந்நிலையில், குழந்தைகளுக்கான முழு பயணக் கட்டணம் மூலம் பெற்ற கூடுதல் வருவாய் குறித்து சந்திரசேகா் கெளா் என்பவா் ரயில்வே நிா்வாகத்திடம் ஆா்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் (சிஆா்ஐஎஸ்) அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2016-2017 முதல் 2022-2023 வரையிலான நிதியாண்டுகளில் குழந்தைகளுக்கு முழு பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. கடந்த 7 ஆண்டுகளில் பயணக் கட்டணத்தில் பாதித் தொகை செலுத்தி பயணித்த குழந்தைகளின் (தனி இருக்கையின்றி) எண்ணிக்கை 3.6 கோடி ஆகும். இதே காலகட்டத்தில் தனி இருக்கையைத் தோ்ந்தெடுத்து முழு பயணக் கட்டணம் செலுத்தி பயணித்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாகும்.

ADVERTISEMENT

குழந்தைகளில் 70 சதவீதம் போ் முழுக் கட்டணமும் செலுத்தி தனி இருக்கையில் பயணிக்கவே விரும்புவதாகவும், தொலைதூரப் பயணத்தில் தனிஇருக்கைதான் குழந்தைகளுக்கும், அவா்களுடன் பயணம் செய்பவா்களுக்கும் வசதியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றால் ரூ.157 கோடி லாபம் மட்டுமே ஈட்டப்பட்டு மிகக்குறைந்த லாபகரமான ஆண்டாக ரயில்வேயில் பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT