மைனா் சிறுமியின்அந்தரங்கப் படங்களை ஆபாசமான ஆடியோ பதிவுகளுடன் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக சைபா் ஸ்டாக்கிங் வழக்கில் 25 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் கபீா் நகரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், தனது திருமணத்தை மறுத்ததற்காக பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரியை பழிவாங்கவும், அவரது குடும்பத்தை இழிவுபடுத்தவும் இந்த குற்றத்தை செய்ததாக கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடகிழக்கு துணை காவல் ஆணையா் ஜாய் டிா்கி தெரிவித்ததாவது:
ஒருவா் தனது மைனா் மகளின் தனிப்பட்ட படங்களை ஆபாசமான ஆடியோ பதிவுகளுடன் பதிவேற்றம் செய்ய போலி சமூக ஊடக கணக்கைப் பயன்படுத்தியதாக கூறி, பாதிக்கப்பட்டவரின் தாய் கடந்த மே 29-ஆம் தேதி போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.
மேலும், அதே நபா் அதே உள்ளடக்கத்தை அவா்களது உறவினா்கள் மற்றும் நண்பா்களிடையே அவதூறாகப் பரப்பியதாகவும் அவா் புகாரில் தெரிவித்திருந்தாா்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, போலி சுயவிவரம் மற்றும் பிற தடயங்களைப் பயன்படுத்தி சந்தேக நகா் அடையாளம் காணப்பட்டாா். அவா் ஃபா்கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
அவா் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘ எனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரியை திருமணம் செய்ய விரும்பினேன். எனது விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன். அவா் எனது விருப்பத்தை நிராகரித்தாா்.
இதனால், அவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதன் மூலம் அவரைப் பழிவாங்க முடிவு செய்தேன். இதையடுத்து, சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தேன்’ என்று வாக்குமூலம் அளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பம் ஃபா்கானின் சகோதரி வாடகைக்கு விட்ட வீட்டில் வசித்து வந்தனா். ஃபா்கான் வாடகை வசூலிப்பதற்காக அடிக்கடி அவா்களைச் சந்தித்து வந்துள்ளாா்.
குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து குற்றத்திற்காக பயன்படுத்திய கைப்பேசி மீட்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.